மூளையால் பார்க்கலாம்!
பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பதைப் போல என்பார்கள். கண்களால் பார்க்க முடியாதவர்களை நாக்கின் மூலமாகப் பார்க்க வைக்கப் போகிறார்கள் விஞ்ஞானிகள். ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் உள்ள ஆய்வுக் குழு ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளது. இந்தக் கருவியின் மூலம் கண்பார்வையற்ற ஒருவர் பார்க்க முடியும். இந்தக் கருவி எப்படி இயங்குகிறதாம்? பார்வையற்றவர்கள் கறுப்புக் கண்ணாடி ஒன்றை அணிய வேண்டும். அந்தக் கறுப்புக் கண்ணாடியில் ஒரு மிகச் சிறிய வீடியோ கேமரா இணைக்கப்பட்டுள்ளது. பார்வையற்றவர் பார்க்கும் திசையில் உள்ள காட்சிகள் வீடியோ கேமராவில் பதிகின்றன. அந்தக் காட்சிகள் செல்போன் அளவே உள்ள கையில் வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு கட்டுப்பாட்டுக் கருவிக்கு அனுப்பப் படுகின்றன. வீடியோ கேமராவிலிருந்து அனுப்பப்பட்ட டிஜிட்டல் சிக்னல்கள் இந்தக் கருவியில் மின்னதிர்வுகளாக மாற்றப்படுகின்றன. அப்படி மாற்றப்பட்ட மின்னதிர்வுகள் லாலிபாப் மிட்டாய் வடிவில் அமைந்துள்ள பிளாஸ்டிக் கருவிக்கு அனுப்பப்படுகின்றன. அந்த லாலிபாப் வடிவ கருவியை வாயில் வைத்தால் அந்தக் கருவியிலிருந்து சிக்னல்கள் நாக்கில் பட்டு மூளைக்குச் செல்கின்றன. மூளை அந்தச் சிக்னல்களிலிருந்து காட்சிகளைப் பார்க்கிறது. பார்ப்பதற்குக் கண்கள் ஒரு கருவி. அந்தக் கருவி வேலை செய்யவில்லையென்றால், வேறொரு கருவியை கண்டுபிடிக்க வேண்டியதுதானே? கண்டுபிடித்துவிட்டார்கள் ஆஸ்திரேலிய அறிவியலறிஞர்கள்!
கருத்துகள்