இயக்குனர் மகேந்திரன்
1980 களில் வந்த திரைப்படங்களை ரசித்த சினமா பிரியர்களுக்கு , நிச்சயம் இயக்குனர் மகேந்திரன் பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும் . நீண்ட நாளாகவே எனக்கு ஒரு ஏக்கம் உண்டு .அது என்னவென்றால் இளையராஜாஅவர்கள் இசை கொடி கட்டி பறந்த அந்த நாட்களில் நாம் பிறக்கலையே என்று . அது போலவே தான் மகேந்திரன் அவர்களின் படங்கள் ரீலிஸ் ஆனா நாட்களில் நாமில்லையே என்ற ஏக்கமும் . யோசித்து பாருங்கள் , அந்த காலகட்டத்தில் இளையராஜா ,பாரதி ராஜா , மகேந்திரன் , பாலு மகேந்திரா, பாலசந்தர் போன்ற தமிழ் சினிமாவை ஆண்ட அரசர்கள் இல்லாமல் இருந்தால் என்னவாயிருக்கும் . தமிழ் திரைப்பட வரலாற்றில் நிச்சயம் வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்திருக்கும் . ஆகவே இவர்களின் பங்கு தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது .இதில் இயக்குனர் மகேந்திரன் பற்றி எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை .ஏனென்றால் சினிமாவில் உச்சத்தில் இருந்த காலத்திலயே , சினிமாத் துறையை வேண்டாம் என்று உதறி தள்ளியவர் ,பிறகு எம்.ஜி ,ஆர் அவர்களின் வேண்டுகோளின் பேரில் மீண்டும் சினிமா இயக்க ஆரம்பித்தார் . எம்.ஜி ,ஆர் அவர்களுக்கு பிடித்த இயக்குனர்களில் இவரும் ஒருவர் .அவரை பற்றி நானறிந்த சில தகவல்கள் :
மகேந்திரன் (பிறப்பு: 1939) புகழ் வாய்ந்த தமிழ்த் திரை இயக்குநர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் ஜெ.அலெக்ஸாண்டர். மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைக்காகவும், அழகுணர்ச்சி மிகு காட்சியமைப்புகளுக்காகவும் இவரது திரைப்படங்கள் புகழ் பெற்றவை.
அவர் இயக்கிய திரைப்படங்கள்
முள்ளும் மலரும் (1978 ), உதிரிப்பூக்கள் (1979), பூட்டாத பூட்டுகள் (1980), ஜானி (1981), நண்டு (1981) , மெட்டி (1982),நெஞ்சத்தை கிள்ளாதே (1982),அழகிய கண்ணே (1982),கை கொடுக்கும் கை (1984),கண்ணுக்கு மை எழுது (1986),ஊர் பஞ்சாயத்து (1992),சாசனம் (2006).
சில தகவல்கள் .....
- திரைப்பட இயக்குநராவதற்கு முன், பிறர் இயக்கிய திரைப்படங்களுக்கு கதை, வசனம், திரைக்கதை எழுதி வந்தார்.
- இனமுழக்கம் , துக்ளக் போன்ற இதழ்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
- மகேந்திரன் சினிமாவும் நானும் என்னும் நூலினை எழுதியுள்ளார். இது 2004 ஆம் ஆண்டு வெளியானது.
- திரையுலகில் ஒரு இடம் பெற முயற்சித்துக் கொண்டிருந்த நாட்களில், எம்.ஜி.ஆர் . தமக்கு மாதச் சம்பளம் அளித்து கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக்கு திரைக்கதை எழுதுமாறு பணித்ததாகவும், அதைத் தாம் பூர்த்தி செய்யவில்லை எனினும், எம்.ஜி.ஆர். அதைப் பற்றி ஏதும் கேட்காமலேயே தொடர்ந்து பண உதவி செய்து வந்ததாகவும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார். எனினும், எம்.ஜி.ஆரின் எந்தப் படத்திற்கும் இவர் வசனமோ திரைக்கதையோ எழுதியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
- சிவாஜி கணேசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். ரஜினியை வைத்து மூன்று படங்கள் இயக்கியுள்ளார். இவரது படங்களில் அதிகம் நடித்த நட்சத்திரம் அவரே.
- மகேந்திரனின் முதல் படம் துவங்கி, அநேகமாக அவரது பல படங்களில் சரத்பாபு இடம் பெற்றார்.
- கன்னட நடிகை அஸ்வினியை தமிழுக்கு அறிமுகம் செய்தவர் மகேந்திரன். படம்: உதிரிப் பூக்கள். பேபி அஞ்சுவும் மகேந்திரனின் அறிமுகமே.
- கமலஹாசனின் தமையன் சாருஹாசனை திரைக்கு உதிரிப் பூக்கள் படத்தின் வாயிலாக அறிமுகம் செய்தவர் மகேந்திரன். மிகச் சிறந்த நடிப்பை வழங்கிய சாருஹாசன், பின்னர் ஒரு கன்னடப் படத்திற்காக மிகச் சிறந்த நடிகருக்கான அனைத்திந்திய விருதினைப் பெற்றார்.
- விஜயனை அறிமுகம் செய்தது இயக்குனர் பாரதிராஜா எனினும், அவருக்கு மறக்க இயலாத ஒரு வேடத்தை உதிரிப் பூக்களில் அளித்து, திரையுலகில் அவரைக் கதாநாயகனாக உயர்த்தியவர் மகேந்திரன். இதைத் தொடர்ந்து, பல படங்களில் விஜயன் கதாநாயகனாக நடித்தார்.
- மகேந்திரனின் மிகச் சிறப்பான அறிமுகம் சுஹாசினி. நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படத்தில் தனது நடிப்பாற்றலுக்காக தேசிய விருதை மயிரிழையில் சுஹாசினி இழந்தார். (பின்னர் சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் சிந்து பைரவி திரைப்படத்திற்காக இவ்விருதினை அவர் பெற்றார்.)
- தாம் முதலில் இயக்கிய முள்ளும் மலரும் திரைப்படத்தில் தாம் நடிக்கவில்லை என்றாலும், அதில் ஒளிப்பதிவாளராக பாலு மகேந்திரா பணி புரிய மிகவும் உதவியவர் கமலஹாசன் என்றும் மகேந்திரன் குறிப்பிட்டதுண்டு. ஆயினும், மகேந்திரன் இயக்கத்தில் கமல் நடித்ததில்லை.
கருத்துகள்