தொடக்கக் கல்வியின் தரமே இந்தியாவின் எதிர்காலம்: அப்துல் கலாம்


தொடக்கக் கல்வியின் தரத்தைப் பொறுத்தே இந்தியாவின் எதிர்காலம் அமையும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்தார்.  ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது அவர் மேலும் கூறியது:  ஆரம்பக் கல்வியை ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமையாக மாற்ற வேண்டும்.  படைப்பாற்றல் திறனை வளர்க்கும் வகையில் ஆரம்பக் கல்வியை மாற்றி அமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. மேலும், எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் குழந்தைகளை வளர்க்க வேண்டும். குழந்தைகள் அனுபவித்துப் படிக்கும் வகையிலும், தங்களை முழுவதுமாக அதில் ஈடுபடுத்திக் கொள்ளும் வகையிலும் பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்றார்.  மேலும், லட்சியத்தை அடைவதற்கு மிகவும் அடிப்படையான நேர மேலாண்மை குறித்து குழந்தைகளுக்கு கற்றுத்தருவது அவசியம். அதன்படி, சிறு வயதிலேயே ஒவ்வொருவருக்கும் ஒரு குறிக்கோளை ஏற்படுத்தி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவற்றை அடைவதற்கான ஊக்கத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த கலந்துரையாடலின் போது, பயங்கரவாதம், ஊழல், இந்திய-பாகிஸ்தான் உறவு ஆகியவை குறித்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு கலாம் பதிலளித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது