கல்வி முறையில் மாற்றம் தேவை
ஓரு சமுதாயம் சிறப்புடன் வாழ மற்ற எல்லாக் காரணிகளையும்விட கல்வி மிக முக்கியமான பங்கை வகிக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. சில நேரங்களில் நாம் அளிக்கிற கல்வியே நம் சமுதாயம் பின்தங்கிப் போவதற்குக் காரணமாகிவிடும்.எனவே, நம் சமுதாயத்துக்கு எப்படிப்பட்ட கல்வி தேவை என்பதை நாம் சரியாக நிர்ணயிக்க வேண்டும். நம் சமுதாயம் மேம்பாடு அடையவும் நம் மாணவர்கள் எதிர்காலத்தில் தரமான குடிமக்களாக வாழவும் நாம் தருகிற கல்வி உதவ வேண்டும். இன்றைய நிலையைக் கூர்ந்து ஆராய்ந்தால், பொறுப்புள்ள குடிமக்களாக அவர்கள் உருவாக இந்தக் கல்வி முறை உதவி செய்கிறதா என்றால் இல்லை.இன்று நம் கல்வியில் இருக்கும் மிகப்பெரிய பலவீனம் சமூகத் தேவை சார்ந்து இல்லாமல் சந்தைக்கான அறிவுசார்ந்து இருக்கிறது. தவிர, நம் தேவைகளை எல்லா நிலைகளிலும் பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு மாணவர்களை உருவாக்கவில்லை.சமூக மேம்பாட்டுக்கும், மாற்றத்துக்கும் வித்திடக்கூடிய கிரியா ஊக்கிகள்தான் மாணவர்கள். ஆனால், அப்படிப்பட்ட சிந்தனையில் இன்று மாணவர்களை நாம் உருவாக்கவில்லை.புதிய பொருளாதாரக் கொள்கையால் பொருளாதாரம் உத்வேகம் எடுத்து வருவதால், சந்தைப் பொருள்கள் உற்பத்திக்கு மனிதவளம் தேவைப்படுகிறது. அதைப் பூர்த்தி செய்ய இன்று மாணவர்கள் தயார் செய்யப்படுகிறார்கள். ஆதலால் வணிகப்பார்வையை உள்ளடக்கிய ஒரு கல்வியைத் தர முடிகிறதே தவிர, மானுட மேம்பாட்டுப்பார்வையைக் கொண்ட கல்வியை நம்மால் தர முடியவில்லை என்பதைத்தான் பார்க்கிறோம்.வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய மனிதவளம் பெருக்க அரசாங்கத்தால் இயலாத நிலையில் தனியாரை இந்தத்துறையில் அனுமதிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் அனுமதித்தோம்.இன்றைய சூழலில் எப்படி அரசாங்கம் சந்தைச் செயல்பாட்டில் வணிக நிறுவனங்களைக் கட்டுப்படுத்தத் தவறியதோ, அதேபோல் இந்தக் கல்வி நிறுவனங்களையும் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது.இன்றைய கல்விச் சாலைகளிலிருந்து வெளியேறும் மாணவர்களின் ஒரு கூட்டம், எப்படியாவது பணம் சம்பாதிப்பது என்ற குறிக்கோளைக்கொண்டு சந்தைக்குள் செல்கின்றனர்.இன்னொரு கூட்டம், வழங்கிய பட்டங்களை வைத்துக் கொண்டு வேலையில்லாதோர் சந்தையில் சேர்ந்து , சமூகத்தை அச்சுறுத்தி வருகின்றனர். இந்தச் சூழல் தொடர்வது ஒரு சமூகத்துக்கு நல்லதல்ல.கல்வியை முறைப்படுத்துவதன் மூலம்தான் நம் எதிர்காலத்தை வளமானதாக்க முடியும். கல்வி இன்று பொதுப்பட்டியலில் இருப்பதால் அது சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது. இருந்தபோதும் அதில் தமிழக அரசு முயற்சி மேற்கொண்டால் நிச்சயமாக நம் தமிழகத்தை மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக ஓர் அறிவுசார்ந்த, திறன் வாய்ந்த, சமுதாயமாக உருவாக்க முடியும். அதற்கு நமக்கு இப்பொழுது ஒரு நல்ல வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.இதற்கு நாம் முதலில் நம் கல்வியின் குறிக்கோளை வரையறை செய்ய வேண்டும். ஒன்று, படித்த அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும். இரண்டு, சமுதாயத்துக்குத் தேவைப்படும் மனித வளத்தை நம் கல்வி உருவாக்கித் தர வேண்டும். மூன்று, ஒட்டுமொத்த பொருளாதார மேம்பாட்டுக்கு வித்திடும் வகையில் நம் மாணவர்களை நம் கல்வி உருவாக்க வேண்டும். நான்கு, மானுட ஒழுக்க நியதிகளைக் கடைப்பிடிக்கும் மனோபாவம் கொண்டவர்களாக மாணவர்கள் கல்விச் சாலைகளிலிருந்து வெளியேற வேண்டும். ஐந்து, இன்றைய சூழலில் புதிய பொருளாதாரக் கொள்கையில் வருகிற வாய்ப்பைப் பயன்படுத்தவும், சவால்களை எதிர்கொள்ளவும் நம் மாணவர்கள் தயார் செய்யப்பட வேண்டும். ஆறு, உலகில் உருவாகும் அறிவுப் பொருளாதாரத்தில் பெருமளவு பங்கேற்கக் கூடிய ஆற்றல் மிக்க அறிவுசால் மாணவர்களை உருவாக்க முனைவதையும் அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.இந்த ஆறு அடிப்படையான குறிக்கோள்களை வைத்து ஒரு புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் உருவாக்கி, ஐந்தாண்டு காலத்தில் ஒரு இயக்கம்போல் செயல்பட்டால் உலகத் தரம் வாய்ந்த மனித ஆற்றலை நம் தமிழகம் தயார்செய்து இந்தியாவுக்கு வழிகாட்டலாம். இதற்கு முதலில் நாம் செய்ய வேண்டியது கல்வியை ஆரம்பக்கல்வியிலிருந்து, பல்கலைக்கழக உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி வரை உயிரோட்டமாக இணைப்பது.அடுத்து நம் கல்விச் சாலைகளை ஆரம்பக் கல்வியிலிருந்து உயர்நிலைக் கல்வி வரை சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்களுக்குத் தேவையான மனித வளத்தை உருவாக்கும் ஆற்றலை வளர்க்க வடிவமைக்க வேண்டும். அப்படிச் செயல்படும் போதுதான் தொழில் தேவைகளுக்கான மாணவர்களை தேவையான ஆற்றல்களுடன் உருவாக்க முடியும்.பொருளாதாரத் தேவைகளுக்குப் பணியாற்றும் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஈடுகொடுக்க, நம் கல்வி நிறுவனங்கள் அந்த நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.இன்று சந்தையில் தரமான ஆற்றல் கூட்டப்பட்ட மாணவர்களுக்குத் தேவை எல்லை இல்லா அளவுக்கு உள்ளது. இந்தத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் அளவுக்கு நம் கல்வி நிறுவனங்கள் மாணவர்களைத் தயார்செய்வது இல்லை. மாறாக, பட்டங்களை அள்ளி வழங்குகிறது. வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் புதுப்புது வேலைகளுக்கும் தொழில்களுக்கும் திறன் வாய்ந்த ஆள்கள் கிடைக்காமல் நிறுவனங்கள் தவிக்கின்றன.சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்கிற அளவுக்குத் திறன் உள்ள மாணவர்களை நம் கல்வி நிறுவனங்கள் உருவாக்கவில்லை. எனவே, இன்றைக்கு எண்ணிக்கையில் அதிக அளவில் உள்ள இளைஞர்களை ஆற்றல் படைத்தவர்களாக நம் கல்விச்சாலைகள் மாற்றித் தந்துவிட்டால் உலகப் பொருளாதாரத்தில் நம் பங்கு தவிர்க்க இயலாததாக மாறிவிடும்.நாம் இன்று இதற்கான சூழலை எப்படி உருவாக்க முடியும் என்று எண்ணும்போது ஜெர்மனி நாட்டின் கல்விமுறையில் இயங்குகிற இரட்டைமுறை வாழ்க்கைத் தொழில் கல்வி என்பது என்னைப் பெரிதும் கவர்ந்தது. இந்தக் கல்வி முறையானது சமூகத்துடன், தொழில்களுடன், வணிகத்துடன் உயிரோட்டமான தொடர்பை ஏற்படுத்தி சமூக தொழில் மற்றும் வணிக மேம்பாட்டுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவும், படித்த அனைத்து மாணவர்களுக்கும் வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் உருவாக்கப்பட்ட ஒன்று.கல்விச்சாலைகளை தொழில் நிறுவனங்களும் அரசாங்கமும் கண்காணித்து தரமான மாணவர்களைத் தேவைக்கு ஏற்றாற்போல் தயார் செய்கின்றன. இரண்டுநாள் கல்விச்சாலையில் பயின்ற மாணவர்கள், மூன்று நாள்கள் தொழில்சாலையில் பயிலுகின்றனர்.இதன் விளைவு, சமூகத்துக்கு என்ன தேவையோ அவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான திறன் பெற்ற மாணவர்களை உருவாக்கித் தந்துவிடுகின்றனர். ஒரு கம்பி வேலை செய்யக்கூடியவர், அவர் செய்கிற வேலை என்பது மிகவும் தரமானது. எனவே அவர் கூலியும் உயர்ந்தது.எனவே, ஒரு தொழில்கல்வி கற்று வேலையில் இருப்போர் மதிக்கத்தகுந்த வாழ்க்கை வாழ்வதைப் பார்க்கும்போது அதை ஏன் தமிழகத்தில் ஏற்படுத்தக் கூடாது என்பதுதான் என்னுடைய அடிப்படையான கேள்வி.இந்த வாழ்க்கைத் தொழில்கல்வி என்பது பள்ளிக்காலத்திலேயே தொடங்கிவிடுகிறது. உயர்கல்விக்குச் செல்ல முடியாதவர்களுக்கும் தரமான வாழ்க்கை வாழ அவர்களின் திறன் அதிகரிக்கப்பட்டு வேலை கிடைக்க வழிவகை செய்துவிடுகின்றனர். இந்தக் கல்விமுறை மிகவும் கடினமான முறைதான், ஆனால் பலன் அளிக்கவல்லது.இந்த வாழ்க்கைத் தொழில் கல்வியை இந்தியாவில் பரிசோதிக்க இப்போது நம் மத்திய அரசு ஜெர்மானிய அரசுடன் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இன்றைய தமிழக அரசு புதிய திசையில், வளர்ச்சிப்பாதையில் தமிழகத்தை இட்டுச்செல்ல முயற்சிப்பதால், தமிழகத்திலிருந்து ஒரு குழு ஜெர்மனிக்கு வந்து இந்த முறையைக் கூர்ந்து ஆய்வுசெய்து பார்த்துவிட்டு நடைமுறைப்படுத்த முயற்சி எடுக்கலாம். நம் கிராமப்புற படித்த, படிக்காத இளைஞர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கி விடலாம்.இதற்கான உதவியைச் செய்ய ஜெர்மானிய அரசு நல்ல மாநிலங்களையும், நிறுவனங்களையும் தேடி வருகிறது. தமிழகம் முயற்சித்தால் நிச்சயம் நன்மை பயக்கும்.இதில் மிகப்பெரிய பொறுப்பு தொழிற்கூட்டமைப்புகளுக்கு உள்ளதால், இந்தத் திட்டத்தில் அவர்களும் இணைக்கப்பட்டு அனைவரும் சேர்ந்து இந்தப் புது முயற்சியை மேற்கொண்டால் தமிழக இளைஞர்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருப்பதாகவே தோன்றுகிறது.இதற்கு பரீட்சார்த்தமாக ஒரு சில தொழில்மயமான மாவட்டங்களில் பரிசோதனை செய்து பார்த்துவிட்டுக்கூட தமிழகம் முழுமைக்கும் நாம் நடைமுறைப்படுத்தலாம். இந்த முறையை கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் சோதனை செய்து பார்க்கலாம். சுருங்கச் சொன்னால் சீனப்பழமொழி சொல்வதுபோல் மீன் தருவதற்குப் பதில் மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதுதான் இந்தத் திட்டம். சான்றிதழ் வழங்குவது அல்ல, திறன் வழங்கி ஒரு பணிக்குத் தகுதியுடையவராக மாற்றிவிடுவதுதான் இந்தத் திட்டம்.இந்தத் திட்டத்தின் மூலம் தொழில்களுக்கான, வேலைகளுக்கான தரமான பணியாளர்கள் அந்தந்த நிலைகளுக்கு ஏற்றவாறு, நிறுவனங்களுக்கேற்றவாறு கல்வி நிறுவனங்களால் தயாரிக்கப்படுவார்கள்.இதன் மூலம் நம் மனிதவளத் தேவைகளும் பூர்த்தியாகும்; மாணவர்களுக்கும் வேலை கிடைக்கும்; அத்துடன் நம் பொருளாதாரமும் மேம்படும். சமூகத்தில் வேலை இல்லாத் திண்டாட்டமும் குறையும். இந்தப் புதிய முயற்சிக்கு வித்திடுமா நம் புதிய தமிழக அரசு?
கருத்துகள்