ஆசிரியர் பணிக்கு இலக்கணம் "பாரதிதாசன்"

ல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதாக வையத்தை நோக்கி மக்களை இட்டுச் செல்லும் பெரும் பொறுப்பினை ஏற்று, தமிழ்க் கவிதைப் பணி ஆற்றிவந்த புரட்சிக்கவிஞர் அவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளிலே இந்தக் கருத்துகளின் கூறுகள் எங்கும் காணப்படும்.

பாரதிதாசனார் என்ன எழுதினாரோ அதன்படி நடக்கிறாரா என்று கூர்ந்து நோக்கும் கண்கள் ஓராயிரம் உண்டு என்பது அவருக்குத் தெரிந்ததுதான்!  அவர் சொன்ன கருத்துகளை ஏற்றுக் கொள்ளாதவர்களும், எதிர்த்தவர்களும் அவரை வேட்டை நாய்கள் போல் கவனித்து வந்தார்கள்.
இதனைப்பற்றித் துளிக் கவலையும் பாரதிதாசனாருக்கு இருந்ததில்லை. இழிவு ஒன்று காணில் அதன் சல்லிவேரையும் கூடக் கல்லி எறிவதில் ஏற்படும் இன்னல் எதுவாயினும் ஏற்பதும், இன்னுயிர் போவதானாலும், தாம் கொண்ட கொள்கையில் இம்மிபிறழாமல் வாழ்வதும் அவருள் ஊறிப்போன பழக்கம்! மாணவப்பருவம் தொடங்கி, தம் மூச்சு முடியும்வரையில் இதையே புரட்சிக்கவிஞர் நிலைநாட்டிக் கொண்டிருந்தார்.
புரட்சிக்கவிஞர் தமிழாசிரியராய் வேலை-பார்த்தகாலை, புதுவை, பிரஞ்சிந்தியா என்ற தனியாட்சியில் இருந்ததல்லவா! அக்காலத்தில் தமிழ்ப் பாடநூல் புதுவைக்கென எதுவும் இல்லை. அன்றைய மதறாஸ் கவர்மெண்டார் எதைப் பாட நூலாகத் தந்தார்களோ அதுதான் புதுவைப் பள்ளியிலும் பயிற்றப்படும்.
பாலசிட்சை, பாட நூலாக வைத்ததைக் கண்டித்த ஒரே குரல் பாரதிதாசனின் குரல்தான்!  அதற்குக் காரணம் பாரதிதாசனுக்கு இருந்த பயிற்றுமுறைப் பழக்கம்!  தொடக்க நிலையில் உள்ள பிஞ்சுக் குழந்தைகட்கு அ என்ற எழுத்தைக் கற்றுக் கொடுக்க அணில் படம் போட்டு அ குறித்திருக்கும்.  அ பயிலப்போகும் குழந்தை எழுதுவதற்கு அரிதான ணி யை இரண்டாவது எழுத்தாகக் கொண்ட அணில் சொல்லைவிட, தனக்கு மிகப் பழக்கப்பட்ட ஒரே சொல்லான அம்மா என்ற சொல்லை மிக எளிதிற் புரிந்து கொண்டுவிட முடியும் என்பது புரட்சிக் கவிஞரின் கருத்து.
என்னவோ நாம் வேலை பார்க்கும் அரசு ஏற்றுக்கொண்டது.  நமக்கு இதில் என்ன கவலை.  போட்டிருப்பதைச் சொல்லிக்கொடுப்போம் என்ற குள்ள மனப்பான்மையோடு பல்லாயிரம் தமிழாசிரியர்கள் பணிந்துவிட்டபோது, தமது கருத்தை விடாது வலியுறுத்தி வந்தார் பாரதிதாசனார்.  மற்றவர் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.  பிரஞ்சிந்திய அரசுக்கோ தமிழ் படிக்கும் குழந்தை-களைப்பற்றிக் கவலையில்லை; பாரதிதாசனும் விடவில்லை. தமக்கு ஒதுக்கப்-பட்டிருந்த முதல் வகுப்புப் பிள்ளைகட்கென தாமே பாடநூல் தம் கையினால் எழுதி, தாமே அதற்குரிய வண்ணப்படங்களும் வரைந்து பயிற்றுவித்தார்.  கரும்பலகையில் சுண்ணாம்புக் கட்டியினால் அழகுறப் படங்களை வரைந்து தாம் வகுத்த பாடங்-களைப் பயிற்றுவித்தார்.  உடன் பணியாற்றிய ஆசிரியர் மனத்திலே, பாரதிதாசன் ஒரு வீணன் என்ற படமே தோன்றியது.
பாடத்திட்டத்தில், ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமும் வேண்டும் என்று கூறி வந்தார் பாரதிதாசன். வ என்ற எழுத்துக்கு வண்ணான் என்றும் அய் என்ற எழுத்துக்கு அய்யர் என்ற படமும் போட்டிருந்தது கவிஞருக்கு எரிச்சல் ஊட்டியது. இளம் பிஞ்சுகளின் உள்ளத்திலே ஜாதி வேறுபாடு என்ற நச்சினைப் புகுத்துவதாயிற்றே! குமுறினார் பாரதிதாசனார்.  அதற்கேற்றபடி தாம் எழுதிய பாடநூலில் சொற்களையும் படத்தையும் மாற்றியமைத்துப் பயிற்று-வித்தார்.
தொடக்க நிலை வகுப்பில் மட்டுந்தானா?  எழுச்சி கொண்ட அந்த உள்ளம் எங்கெங்-கெல்லாமோ தன் பணியை ஆற்றி வந்தது.
முதற் பாடப் புத்தகம்; தமிழாசிரியர் பயிற்சியைத் தொடங்கிடப் புத்தகத்தைப் பிரிக்கிறார்; முதல் பக்கம். இவர் நமது ராஜா, இவர் இங்கிலாந்தின் சக்ரவர்த்தி, இவர் பெயர்.... என்ற பாடமும், இங்கிலாந்து நாட்டுப் பேரரசரின் உருவப் படமும் பொறித்திருக்கின்றார்கள்.
மீசை படபடக்கிறது. நரம்பு முறுக்கேறு-கிறது.  மடையனுங்க என்று அரிமாக்குரல் எழுப்புகிறார். எதிரில் உள்ள சிறுவர்கள் அஞ்சி நடுங்குகிறார்கள். தாம் குற்றம் புரிந்துவிட்டோமோ என்ற அய்யத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.  பாரதிதாசன், பாடநூலை மூடிவைத்துவிட்டுக் கரும்பலகையில் ஒரு நாயின் படத்தை எழுதிவிட்டு தம் இருக்கையில் அமர்கிறார்.  வகுப்பு நேரத்தில் இந்த இடத்தில் மட்டும் ஓசை கேட்கவில்லையே என்று பக்கத்து வகுப்பாசிரியர் வருகிறார்.
கரும்பலகையில் நாயின் ஓவியம்; ஆசிரியர் எதையோ எழுதியபடி இருக்கையில், சிறுவர்கள் மட்டும், தலைமையாசிரியரின் வருகை கண்டு எழுந்து நிற்கிறார்கள்.  பாரதிதாசன் சிறிதும் கவலைப்படாமல் எழுகிறார்.
தலைமையாசிரியர் எப்படி, என்னவென்று கேட்பது என்றறியாது நிலை தடுமாறி நிற்கிறார்.
பாரதிதாசன் கூறுகிறார்: நம்ம ஊரெல்லாம் குடியரசு நாடுன்னு சொல்லிக்கிறோம். சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற கொள்கையை உலகத்துக்கே வழங்கிய பிரஞ்சுக் குடியரசில், நம்ம பிள்ளைங்க, எடுத்த எடுப்பில் படிக்கிற பாடம் என்ன தெரியுமா? இவர் நமது ராஜா, இங்கிலாந்தின் சக்ரவர்த்தி ரொம்ப நல்லாருக்குங்க/ இப்படிப்பட்ட பாடத்தைச் சின்ன பிள்ளைங்-களுக்குக் கத்துக் குடுத்தா குடியரசு நாட்டுலியும் சக்ரவர்த்தி இருப்பார்னு நினைச்சிடுவாங்களே நமது தேசம் இங்கிலாந்துன்னு பாடம் பண்ணிடுவாங்களே! என்கிறார் தமிழாசிரியர் சுப்புரத்தினம்.  அதற்காக, வரையறுக்கப்பட்ட பாடத்தைச் சொல்லிக்கொடுக்காமல் விட்டுவிடலாமா?  நமது கடமையாயிற்றே என்று கூறுகிறார் தலைமையாசிரியர்.
எடுத்துக்காட்ட வேண்டியதும் கடமை-தான் என்ற கருத்தைக் கூறியனுப்பு-கிறார் பாரதிதாசன்.  அதுசரி, நாயின் படத்தை எதுக்கு எழுதி வைக்கணும்? அய்யமும் வியப்பும் தலைமையாசிரியரைத் தள்ளாடச் செய்கின்றன.
தான் பிறந்த நாட்டுக்கு முரணான கருத்தைக் கூறுபவர்களைவிட, நாயின் படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவனே சிறந்தவன் என்று கூறாமல் கூறுகிறார் கவிஞர். சில நாட்களுக்குப் பிறகு கல்வித்துறை அதிகாரியை இந்த உரையாடல் எட்டுகிறது.  அவர் திருத்தத்தை ஏற்று, தமிழாசிரியர்க்கு நன்றி கூறுகிறார். உத்தரவும் பிறக்கிறது.  பாடநூலில் வரும் இந்த அரச வணக்கப் பாடலைக் கற்பிக்க வேண்டியதில்லை என்பதாக!
இழிவைத் துடைப்பது - அறிவை வளர்ப்பது -  தாயகப்பற்றை, தாய்மொழிப் பற்றை, ஊட்டுவது!  இவை யாரோ சிலரின் வேலையன்று; அது ஆசிரியரின் தலையாய கடன்; அரசின் நீங்காத பொறுப்பு; கவிஞரின் முதல் வேலை! இந்தப் பொறுப்புகளைச் சரிவர நிறை-வேற்றச் செய்வதில் புரட்சிக்கவிஞர் ஈடுபட்டார்.  வெற்றி பெற்றார்    .  
நன்றி : உண்மை (மாத இதழ்   )

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

விளம்பர பலகை இப்படித்தான் இருக்க வேண்டும் ! ...

இனிய பாடகர் சாகுல் ஹமீது