சிறந்த அறிவியல் சாதனைகள்

ஆனந்த விகடனில் எழுத்தாளர் சுஜாதா எழுதிக்கொண்டிருந்த 'கற்றதும் பெற்றதும்' தொடரை நம்மில் பலர் படித்திருப்போம். ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும், "இந்த ஆண்டின் சிறந்த . . ." என்றொரு பட்டியலை வெளியிடுவார். "சிறந்த ஸ்வீட்", "சிறந்த காரம்" என்று ஆரம்பித்து, "சிறந்த பாடல்", "சிறந்த புத்தகம்" என்று எங்கெல்லாமோ அந்தப் பட்டியல் நீளும். அதனை நினைவூட்டும் வகையில், அமெரிக்காவின் பிரபல டைம் பத்திரிகையில் சென்ற ஆண்டின் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பற்றி நிபுணர்கள் எழுதியிருந்தார்கள். அமெரிக்காவில் நடக்கும் ஆராய்ச்சியைப் பற்றி மட்டும் பேசாமல், உலகம் முழுவதைப் பற்றியும் பேசியிருந்தார்கள். அறிவியல் ரீதியில் உலகம் தற்பொழுது எங்கு உள்ளது என்பதைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் உதவும் பட்டியல். அதனை  உங்களுக்காக இங்கே பகிர்ந்து கொள்கிறேன் ..

1. Large Haldron Collider

ஸ்விட்சர்லாண்ட் - ஃப்ரான்ஸ் நாடுகளின் எல்லைப் பகுதியின், CERN (European Organization for Nuclear Research) நிறுவனம் கட்டிய பிரம்மாண்டமான Particle Acceleratorதான் அது. உலகம் தோன்றிய நொடியை மீண்டும் பாவனை (simulate) செய்யும் நோக்கத்துடன் துவங்கப்பட்ட ஆராய்ச்சி. இதனைப் பற்றிய விவரமான ஒரு கட்டுரை நிலாச்சாரலில் (நிலாச்சாரல். காம்  ) ஏற்கெனவே இடம்பெற்றிருந்தது. அது சரி, Higgs Boson துகள்களைப் பற்றி ஏதேனும் அறிய முடிந்ததா!? இல்லை, இன்று வரை இல்லை. ஆனால், LHCயின் உள்ளே ஏதோ ஹீலியம் ஒழுக ஆரம்பித்துவிட்டதாம். அதனால் இழுத்து மூடியிருந்தார்கள். ஆராய்ச்சி மீண்டும் துவங்கிவிட்டதா எனத் தெரியவில்லை.

2. வடக்கு துருவப் பயணம்

எந்த ஜென்மத்திலோ வடக்கு துருவத்தில் கால் வைத்தாகி விட்டதே என்று வியக்க வேண்டாம். இங்கே குறிப்பிட்டிருப்பது செவ்வாய் கிரகத்தின் வடக்கு துருவத்தைப் பற்றி. அமெரிக்காவின் NASA அனுப்பிய ஒரு ரோபோ (ஃபீனிக்ஸ் என்ற பெயர் அதற்கு) அங்கு சென்று வேவு பார்த்திருக்கின்றது. தண்ணீரும், பனிக்கட்டிகளும் அங்கு நிறைந்திருப்பதால், செவ்வாயில் ஏதேனும் உயிர் வாழ்ந்தால், அது துருவப் பகுதிகளில்தான் இருக்கவேண்டும் என்று சொல்கின்றார்கள். செவ்வாய் கிரகத்தின் குளிர் தாங்க முடியாமல், அந்த வானளாவிக் கப்பல் வெடித்துவிடும் என்று பேசிக்கொள்கிறார்கள்.

3. உயிரை உருவாக்க முடியும்

க்ரெய்க் வெண்டர் என்ற மருத்துவ விஞ்ஞானி, உலகில் முதல் முறையாக ஒரு உயிரை அடிப்படையிலிருந்து உருவாக்கியிருக்கிறார். 5,82,000 க்ரோமோஸோம் ஜோடிகளைச் சேர்த்து ஒரு பாக்டீரியாவைத் தயாரித்திருக்கிறார். இதற்கு Mycoplasma Laboratorium என்ற பெயரும் வைத்தாகிவிட்டது. தினம் நாம் செய்யும் எத்தனையோ வேலைகளுக்கு பாக்டீரியாக்களின் உதவி தேவையாக இருக்கின்றது. வெண்டரின் ஆசை என்னவென்றால், நமக்கு தேவைப்படும் எல்லா விதமான பாக்டீரியாக்களையும் ஆய்வகத்திலேயே தயாரிப்பதுதான்.

4. விண்வெளியில் சீனா

சீனாவின் வீரர்கள் விண்வெளியில் பறக்கத் துவங்கிவிட்டார்கள். இதென்ன ஆச்சரியம், அமெரிக்காவும் ரஷ்யாவும் எப்பொழுதோ இதைச் செய்துவிட்டனவே! ஆனால் சீனா 2003, 2005, 2008 என்று வரிசையாக, ஐந்து வருடங்களில் மூன்று முறை இதனை நடத்திக் காட்டியிருக்கிறது. அதிலும், சென்ற ஆண்டில், விண்வெளியில் நடைபழகிவிட்டு வந்திருக்கின்றார்கள். ஐந்தே வருடங்களில் எத்தனை பெரிய வெற்றி! அதோடு நிற்கவில்லை. 2020க்குள் மக்களை நிலவிற்கு அழைத்துச் செல்லப் போகின்றார்களாம். "நெலா நெலா ஓடி வா" என்ற காலம் மறைந்து நாம் நிலாவிற்கு செல்லும் காலம் வரப்போகின்றது.

5. இன்னும் நிறைய கொரிலாக்கள்

குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டுவதற்காகவே குரங்குகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நமக்கு, இந்தக் கண்டுபிடிப்பின் மகத்துவத்தைப் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம்தான். ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருப்பது என்னவென்றால், அவர்கள் நினைத்ததைவிட அதிக கொரிலாக்கள் இன்னும் உலகில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனவாம். குறிப்பாக, ஆப்பிரிக்காவின் காடுகளில், முன்பு நினைத்ததை விட இரு மடங்கு கொரிலாக்கள் இருக்கக்கூடும் என்று நினைக்கின்றார்கள். துக்கம் தரும் செய்தி என்னவென்றால், காங்கோவில் நடக்கும் யுத்ததால் (அயன் தமிழ் திரைப்படம் பார்த்தீர்களா?!) அங்கிருக்கும் விலங்குகளுக்கெல்லாம் ஆபத்து நேரக்கூடுமாம்.

6. இன்னும் பல உலகங்கள்

நம் பூமி மிகவும் சிறிதாகத் தோன்றுகின்றது. சூரியனை பூமி வட்டமிடுவது போல, வேறெங்கேனும் ஏதாவது சில கிரகங்கள் வேறு (சூரியன் போன்ற) நட்சத்திரங்களை வட்டமிட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று சில வருடங்களாகவே விஞ்ஞானிகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்னால், 1995ல் இது போன்ற சில கிரகங்களை கண்டுபிடித்தார்கள். அவற்றை Exoplanets என்றும் அழைத்தார்கள். சென்ற வருடம், பெரும் சாதனையாக, ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த மிச்சல் மேயர் நாற்பத்தைந்து உலகங்களைக் கண்டுபிடித்தார். இதனைத் தொடர்ந்து, நவம்பர் மாதம், அமெரிக்க-கனடா குழுக்கள் சில, நான்கு Exoplanetகளின் புகைப்படங்களையும் வெளியிட்டன. விண்வெளியில் மனிதன் எங்கோ போய்விட்டான் என்பதற்கு இதுவே ஆதாரம்.

7. காணப்படாமை
அந்தக் காலத்து மந்திரவாதி சினிமாக்களில் ஏதோ ஒரு போர்வையை உடுத்திக் கொண்டால், நாயகன் மற்றவர் கண்களுக்குத் தெரியாமல் போய்விடுவார். நாற்பது வருடங்களுக்கு முன்னால் நாம் செய்த ஜீபூம்பாவை, சில வருடங்களுக்கு முன், எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங் ஹாரிபாட்டரில் செய்து, உலகையே ஒரு கலக்கு கலக்கினார். இப்பொழுது, நிஜமாகவே அப்படி ஒரு கருவியைக் கண்டுபிடித்திருக்கின்றார்கள் கலிஃபோர்னியா (பேர்க்லி) பல்கலைகழக்கத்தின் மாணவ மாணவியர்கள். ஏதோ, கண்கட்டு வித்தை என்று நினைக்கவேண்டாம். இயற்பியல் சார்ந்த நுணுக்கங்களைக் கொண்டே இதனை வடிவமைத்திருக்கிறார்கள். மிகவும் மென்மையான கருவி - சினிமாவில் பார்த்தது போலவே, போர்வை போன்றதாம். விலை ரொம்ப, ரொம்ப, ரொம்ப அதிகம்!

8. மயிர் பிடுங்கி, மீண்டும் சென்ஸோயிக் மிருகங்கள்

சென்சோயிக் காலம் என்பது, அறுபத்தி ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்த காலத்தைக் குறிக்கும். மைக்கேல் க்ரைடன் எழுதிய ஜுராஸிக் பார்க்கைப் படித்திருந்தாலோ, அல்லது ஸ்பீல்பர்க் அதிலிருந்து உருவாக்கிய திரைப்படத்தைப் பார்த்திருந்தாலோ, உங்களுக்கு டி.என்.ஏவிலிருந்து ஒரு மிருகத்தை உருவாக்குவது எப்படி என்று ஓரளவு புரியும். ஆனால், அதெல்லாம் வெறும் கற்பனையே. அறிவியல் கற்பனைக் கதைகளில் என்ன வேண்டுமானாலும் பூ சுத்தலாம் என்பது பலரின் கருத்து. ஆனால், அந்த கற்பனை இப்பொழுது பென்ஸில்வேனியா பல்கலைகழகத்தில் நினைவாகிக் கொண்டிருக்கின்றது. ஸ்டீவன் ஷுஸ்டர் தலைமையில், அந்தக் கால மிருகத்தின் மயிர்களில் இருந்து, கிட்டத்தட்ட எண்பது சதவிகித டி.என்.ஏ சமாச்சாரங்களைக் கண்டுபிடித்துவிட்டார்கள். பாக்கி இருபதையும் முடித்துவிட்டால், அமெரிக்காவில் ஜுராஸிக் பார்க் போன்ற ஒன்றை பார்க்கலாம். ஆனால், நீங்களோ நானோ உயிரோடு இருக்கும் வரைக்கும் அது நடக்க வாய்ப்பில்லை என்பது உண்மையே.

9. அறிவியல் அறிவு

அமெரிக்கவாழ் மக்களுக்கு அறிவியலைப் பற்றி அறிவு வளர்ந்துவிட்டதாக டைம் பத்திரிகை சொல்கிறது. தற்போதைய நிலவரத்தின்படி, கிட்டத்தட்ட நான்கில் ஒருவருக்கு அறிவியல் சார்ந்த கட்டுரைகள் எல்லாம் புரியுமாம். அமெரிக்காவைப் பற்றி எல்லாம் நமக்கெதற்கு! நம் நாட்டின் நிலவரம் என்ன? அறிவுஜீவிகள் அதிகம் குடியிருக்கும் நாடு இந்தியாதான் என்று சொன்னாலும், எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் எத்தனை லட்சம் பேர்! அவர்களுக்கு எப்பொழுது நாம் அறிவியல் சொல்லித் தரப் போகின்றோம்? அது சரி, இதில் எந்த நாடு முன்னோடியாக விளங்குகிறது? சந்தேகம் என்ன, சீனாதான்!

10. முதல் குடும்பம்

இந்தியாவில்தான் குடும்பம் என்ற ஸ்தாபனம் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றது என்பது நம்மில் பலரது எண்ணம். ஒரு பக்கம் நம் வீடுகளிலும், குடும்பத்திற்கான முக்கியத்துவம் குலைந்து கொண்டிருக்கும் நிலையில், ஜெர்மனியில் 4500 ஆண்டுகளுக்கு முன், மக்கள் குடும்பம் குடும்பமாகவே வாழ்ந்தார்கள் என்பதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது. வெறும் நான்கு எலும்புக்கூடுகளைக் கொண்டு, கிடைத்த டி.என்.ஏவை பரிசோதனை செய்து, அவை நான்கும் அப்பா, அம்மா, இரு மகன்களுடையது என்று கண்டுபிடித்திருக்கின்றார்கள். அறிவியல் நிபுணர்களைப் பொறுத்தவரை, முதல் குடும்பம் இதுவே என்று சொல்கின்றது டைம் பத்திரிகை.

அறிவியல் எத்தனை வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தால், ஒரு பக்கம் தலை சுற்றுகின்றது, மற்றொரு பக்கம் பிரமிப்பாக இருக்கிறது. உயிரியல், வானவியல், இயற்பியல் என்று எல்லா திசைகளிலும் எத்தனை முன்னேற்றம். இன்னும் என்னென்ன முன்னேற்றங்கள் வரப்போகின்றனவோ!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது