எது சமச்சீர் கல்வி?

சமச்சீர் கல்வியில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவித்து விட்டதால், இக்கல்வியாண்டு முதலாக தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி உறுதியாகிவிட்டது. இனி பள்ளிகள் எல்லாவற்றிலும் பாடநூல் விநியோகமும், கற்பித்தல் பணியும் தொடங்கிவிடும். தமிழகப் பள்ளிகளில் கடந்த இரண்டு மாதங்களாக நிலவிய இரண்டும்கெட்டான் நிலைமைக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது என்பதுவரை மகிழ்ச்சி.

தமிழகத்தில் அனைவருக்கும் பொதுவான பாடத்திட்டம் வேண்டும் என்பதற்காக, 2006-ம் ஆண்டு முதலாகத் தொடர்ந்து குரல் கொடுத்தது மற்றும் வழக்குத் தொடுத்ததில் பொதுவுடைமைக் கருத்துச் சார்புள்ள அறிவுஜீவிகளுக்கும், சில கல்வியாளர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. இவர்களது கோரிக்கை தி.மு.க. அரசால் ஏற்கப்பட்டு, 2010-ல்தான் தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளி அளவில் ஒரு வகுப்புக்கு மட்டும் சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்தது. இதுநாள்வரை, சமச்சீர் கல்விக்காகக் குரல் கொடுத்த இவர்கள், தற்போது தங்கள் போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைத்தால் அது தவறு. இப்போதுதான் அவர்கள் களத்தில் நின்று காணவும், குரல்கொடுக்கவும் வேண்டிய உண்மையான தேவை மேலதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி முழுமையாக அமலுக்கு வந்துள்ளதன் மூலம் மாநில கல்விச் சூழலில் இரண்டு வகையான புதிய நிலைமைகள் இயல்பாக உருவெடுத்துள்ளன. முதலாவதாக, அனைத்துப் பள்ளிகளும் (சுமார் 45,000 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுமார் 11,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகள், 25 ஓரியண்டல் பள்ளிகள், 50 ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் அனைத்தும்) ஒரே பாடத்திட்ட முறைமைக்கு மாறிவிடுவதால், பயிற்றுமொழியைக் கொண்டு, "தமிழ்வழிப் பள்ளிகள்', "தனியார் ஆங்கிலவழிப் பள்ளிகள்' என்ற இரு வகையாக மட்டுமே அவற்றை அடையாளப்படுத்த முடியும். ÷அதேபோன்று, பயிற்றுமொழி மட்டும்தான் வேறு, பாடத்திட்டம் ஒன்றே என்பதால், கல்விக் கட்டணம்கூட, தமிழ்வழிப் பள்ளிகளுக்கானவை, ஆங்கிலவழிப் பள்ளிகளுக்கானவை என்று இரு விதமாக அமைக்கப்பட ஏதுவான நிலைமை உருவாகியுள்ளது. இரண்டாவதாக, மெட்ரிகுலேஷன் என்பதற்கு வணிக பலம் இல்லாமல் போனதால், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு மாறவும், அதுதான் சிறந்த கல்வி என்கிற தோற்றத்தை உருவாக்கவும் தனியார் பள்ளிகள் முயலும். சி.பி.எஸ்.இ. பள்ளியாக மாறுவதற்கும், புதிதாக இன்டர்நேஷனல் பள்ளிகளைத் தொடங்கவும் முயலும். வசதிபடைத்தவர்கள் தங்களது குழந்தைகளை அதிகமான கட்டணத்தில் வசதியான பள்ளியில் படிக்க அனுப்புவதை யாரும் குறை சொல்ல முடியாது. அது அவரவர் விருப்பம். உரிமையும்கூட. ஆனால், ஓர் ஏழைக் குழந்தைக்கும் அதே தரத்திலான பாடத்திட்டம் கற்பிக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது கருத்து. அதுதான் ஒரு ஜனநாயக நாட்டில் அரசின் கடமையும்கூட. அதற்கேற்ப சமச்சீர் பாடத்திட்டத்தையும், குறைகள் இருப்பின் நீக்கிச் சரி செய்ய வேண்டும் என்பதுடன் கற்பித்தலில் ஆசிரியர்களைப் பொறுப்பேற்கச் செய்வதும் மிகவும் அவசியமாக இருக்கிறது. ஏனெனில், எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற அரசாணை காரணமாக, எந்தவித நிபந்தனையும் கட்டுப்பாடும் இல்லாமல், வகுப்புக்கே வராத மாணவர்களையும் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும் நிலைமை - குறிப்பாக அரசுப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ளது. வகுப்புக்கே வராத "ஆல் பாஸ்' மாணவர்கள் 9-ம் வகுப்புக்கு வரும்போது, தமிழைக்கூட படிக்கத் தெரியாதவர்களாக வருகிறார்கள். இவர்களையும் எப்படியோ 10-ம் வகுப்புக்குத் தள்ளிவிடும் வேலையையும் ஆசிரியர்கள் செய்துவிடுகிறார்கள். மாணவர் எண்ணிக்கை குறைந்தால், ஆசிரியர் பணியிடங்கள் குறையும்; இடமாற்றம் நேரிடும் என்பதற்காக, பள்ளிக்கே வராத மாணவர்களையும் வருகைப் பதிவேட்டில் தொடர்ந்து வைத்திருந்து பாஸ் போடுவதும், பாடங்களை நடத்தாமல் இருப்பதும் ஊரகப் பள்ளிகளில் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் கற்பித்தலுக்குப் பொறுப்பேற்கச் செய்யாமல் பாடத் திட்டங்களை சி.பி.எஸ்.இ.க்கு இணையானதாக, தரமானதாக, சமச்சீராக அளித்தாலும், ஏமாற்றத்துக்கு ஆளாவது ஏழைக் குழந்தைகள்தான். பள்ளிகளில் மாணவர்களை மதிப்பீடு செய்வதைப் போல, ஆசிரியர்களின் கற்பித்தலையும் மதிப்பீடு செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. தற்போது சமச்சீர் கல்வியால் ஒரே பாடத்திட்டம் என்பதால், 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை, அந்தந்தக் கல்வி மாவட்ட அளவில், பொது வினாத்தாள் மூலம் (ஒரே வினாத்தாளில் ஆங்கிலம், தமிழில் கேள்விகள் இருக்கும் வகையில் தயாரித்து) தேர்வு நடத்தி, விடைத்தாள்களை வேறு பள்ளிகளில் கொடுத்து திருத்திப்பெற்று, ஆசிரியர்களின் கற்பித்தலை மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை உருவானால் மட்டுமே, மக்கள் நம்பிக்கையுடன் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முன்வருவார்கள். கற்பித்தல் குறைபாடுகளைக் களையவும், களைய முடியாத நிலையில் அத்தகைய ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் அதிகாரமுள்ள அமைப்பாக பெற்றோர்-ஆசிரியர்- அமைப்போ அல்லது ஏதாவது ஒரு பாரபட்சமற்ற கண்காணிப்பு அமைப்போ செயல்படுவதுதான் இதற்கு ஒரே வழி. செல்வந்தர் வீட்டுப் பிள்ளைக்குத் தனியார் பள்ளியில் கிடைக்கும் அதே கல்வி, சாதாரண ஏழைக்கும் கிடைக்கச் செய்யும் ஒரே விதமான பாடத்திட்டத்துக்குப் பெயர்தான் சமச்சீர் கல்வியே தவிர, தரம் குறைந்த கல்வித்திட்டமல்ல. கடையனுக்கும் கடைத்தேற்றம் என்கிற வகையில், அடித்தட்டு மக்களுக்கும் சர்வதேச அளவிலான தரமான கல்வியை அரசு வழங்குவதுடன், அதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளையும், தகுந்த ஆசிரியர்களையும் உறுதிப்படுத்துவதன் மூலம்தான் சமச்சீர் கல்வி என்பது உறுதிப்படுத்தப்படும். தனியார் பள்ளியில் கற்பித்தலுக்கு ஆசிரியரைப் பொறுப்பேற்கச் செய்யும்போது, அரசுப் பள்ளிகளில் மட்டும் ஏன் தயக்கம்? இந்தத் தயக்கம்தானே பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கத் தயங்கும் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. ÷சமச்சீர் கல்வி அவசியம். அதே நேரத்தில், கற்பித்தலில் சமநிலையை உறுதிப்படுத்துவதும் மிகமிக அவசியம். 
 நன்றி - தினமணி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது