ஆசிரியர் பணிக்கு இலக்கணம் "பாரதிதாசன்"
எ ல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதாக வையத்தை நோக்கி மக்களை இட்டுச் செல்லும் பெரும் பொறுப்பினை ஏற்று, தமிழ்க் கவிதைப் பணி ஆற்றிவந்த புரட்சிக்கவிஞர் அவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளிலே இந்தக் கருத்துகளின் கூறுகள் எங்கும் காணப்படும். பாரதிதாசனார் என்ன எழுதினாரோ அதன்படி நடக்கிறாரா என்று கூர்ந்து நோக்கும் கண்கள் ஓராயிரம் உண்டு என்பது அவருக்குத் தெரிந்ததுதான்! அவர் சொன்ன கருத்துகளை ஏற்றுக் கொள்ளாதவர்களும், எதிர்த்தவர்களும் அவரை வேட்டை நாய்கள் போல் கவனித்து வந்தார்கள். இதனைப்பற்றித் துளிக் கவலையும் பாரதிதாசனாருக்கு இருந்ததில்லை. இழிவு ஒன்று காணில் அதன் சல்லிவேரையும் கூடக் கல்லி எறிவதில் ஏற்படும் இன்னல் எதுவாயினும் ஏற்பதும், இன்னுயிர் போவதானாலும், தாம் கொண்ட கொள்கையில் இம்மிபிறழாமல் வாழ்வதும் அவருள் ஊறிப்போன பழக்கம்! மாணவப்பருவம் தொடங்கி, தம் மூச்சு முடியும்வரையில் இதையே புரட்சிக்கவிஞர் நிலைநாட்டிக் கொண்டிருந்தார். புரட்சிக்கவிஞர் தமிழாசிரியராய் வேலை-பார்த்தகாலை, புதுவை, பிரஞ்சிந்தியா என்ற தனியாட்சியில் இருந்ததல்லவா! அக்காலத்தில் தமிழ்ப் பாடநூல் புதுவைக்கென எதுவும் இல்லை. அன்...