பேருந்து பயணம்
பேருந்து பயணம் என்பது இவ்வளவு கொடுமையாக கூட இருக்க முடியுமா என்பது சென்னை பேருந்துகளில் பயணிக்கும் பொழுது உணரலாம் .. பரபரப்பான வாழ்வில் நெரிசல் மிக்க இந்த பயணங்கள் மனிதனை விரக்திநிலைக்கு கொண்டு செல்லும் என்று சொன்னால் கூட அது குறைபடுத்தி கூறுவாதாகவே இருக்கும் .. நான் அண்ணா பல்கலையில் பயில்பவன் என்பதால் , கிண்டியில் இருந்து பல்கலை கழகத்திற்கு 21G, M49, ஆகிய பேருந்துகளின் மூலம் சென்று இறங்கும் பொழுது கசக்கி தூக்கி ஏறிய பட்ட தாளாக செல்வேன் .. பெரும்பாலான பயணங்கள் , தோடு கோட்டினை தொட முடியாத கபடி வீரனை போல் , படியை தாண்டி பேருந்துக்குள் செல்ல முடியாமல் படிகட்டோடு முடிந்து விடும் ..இது எல்லாம் கூட தாங்கி கொள்ள கூடிய இன்பங்கள் தான் , அவ்வளவு நெரிசலில் பயணசீட்டு வாங்குவது , சட்ட மன்ற உறுப்பினர் தேர்தலில் நிற்பதற்கு சீட்டு வாங்குவதை விட கடினமானது .. கடவுளே சிலையில் இருந்து உயிரோடு வந்தாலும் வரலாம் ஆனால் நடத்துனர் தனது நாற்காலியை விட்டு எழுவது என்பது கனவிலும் நடக்காத நிகழ்வு... எப்படியோ ஒருவரிடம் இருந்து ஒருவராக சில்லறையை கடத்தி , இறங்க வேண்டிய நிறுத்தம் வருவதற்குள் பயணசீட்டு வாங்கிய பின் வரகூடிய திருப்தி , போர்வீரன் போரில் வென்ற பிறகு கூட அப்படியொரு சந்தோசம் கிட்டுமா என்பது சந்தேகம் தான் .. இந்த மாதிரியான பயணங்களில் இத்துனை இன்பங்களை அனுபவிக்கும் போது எங்கள் ஊரின் பேருந்து பயணங்கள் நினைவிற்கு வருகின்றன.
எனது ஊர் பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம் ... இங்கு உள்ளது போல் அடிக்கடி அங்கு பேருந்து கிடையாது , குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் தான் எங்கள் ஊரில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்கும் , நெகமம் செல்வதற்கும் பேருந்து வரும். ... எனது ஊர் வழியாக நான்கே பேருந்துகள் தான் செல்லும் .. அதில் ஒன்றே ஒன்று மட்டும் தான் அரசு பேருந்து.. சாலையின் இரு புறமும் தென்னை மரங்கள் சூழ , இளையராஜாவின் இனிய பாடல்களோடு பேருந்துகளில் பயணிக்கும் பொழுது பயணம் இன்னும் நீளாதா என்று ஏங்க வைக்கும் ..நடத்துனர் எப்படியும் பரிச்சயமான நபராக இருப்பார்... எங்கள் ஊர் அண்ணன்களும் மாமாக்களும் , கூட்டாக செல்லும் பொழுது... தென்னடா ? சாந்திக்கா ( சாந்தி திரையரங்கம் ) , இல்ல துரைஸ்க்கா ( துரைஸ் திரையரங்கம் ), சீக்கரம் வந்துருவீங்காளா? இல்ல , பஸ் ஸ்டேண்டுக்கு வெளிய வண்டிய போட்டு வைக்குனுமா ? ' என்று கேட்கும் அளவுக்கு பழகிய நபராக இருப்பார்.. காலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் தம்பி தங்கைகள் , நூல் மில்லுக்கு செல்லும் அக்காக்கள் , கோவைக்கு இரும்பு தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லும் அண்ணன்கள் , பொள்ளாச்சி சந்தைக்கு செல்லும் பாட்டிகள் , தேங்காய் மட்டை உரிக்க , அழுக்கு வேட்டியுடன் அதோடு வசி ( தேங்காய் உரிப்பதற்கு பயன்படுத்தும் கடப்பாரை போன்றொரு கருவி ) கொண்டு செல்லும் மாமாக்கள் ..அதோடு " பொத்தி வச்ச மல்லிகை மொட்டு" போன்ற என்பதுகளை தன்வசபடுத்திய திரைப்படபாடல்கள் , இப்படியொரு இன்பமான பயணம் , நான் தினமும் பயணிக்கும் மாநகர பேருந்தில் கிட்டுமா? செல்லமுத்து அண்ணே , எங்க சித்தப்பா, போதை போட்டு தடுமாரிட்டு போகுது, வண்டிய நிறுத்து அண்ணே .. கூட்டிட்டு போயரிலாம்" என்ற மாதிரியான சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறும் ,,, ஒரு சில சமயங்களில் அம்புலேன்சு வண்டியாகவும் பயன்படுத்த பட்டது உண்டு ...
இன்றைய தினங்களில் எத்தனையோ வசதிகள் பேருந்துகளில் வந்து விட்டன .. AC, ULTRA DELUX , மாநகர தாழ் தள சொகுசு பேருந்து.. போன்ற எத்தனை பேருந்துகளில் பயணித்தாலும் , பழைய ஆடியோ கேசட் இசைக்கும் , டேப்பில் பாட்டை கேட்டுக் கொண்டு , தென்னை மரங்களை ரசித்து கொண்டும் , எனது மக்கள் பேசும் பொழுது சாதரணமாக வந்து விழும் பொள்ளாச்சி குசும்பை கேட்டு சிரித்து கொண்டும் பயணித்த இன்பம் இன்றளவும் கிட்டவில்லை , என்றளவும் கிட்டாது..........
கருத்துகள்